எழுத்தாளர் - சதிஷ் விவேகா
எழுதிய - சரித்திர புதினம்
எழுதிய - மாமாங்கம்
வானதி பதிப்பகம் வெளியீடு
அற்புதமான சரித்திர நாவல்
இந்த சரித்திர புதினம் பற்றி சதிஷ் விவேகா பதிவு
மாமாங்கம் அப்படி என்றால் என்ன?
இந்த கேள்விக்கு பதில் உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் எனக்கு அது தெரியவில்லை. அதை தேடிய பயணத்தில் கிடைத்த அற்புதமான தகவலின் அடிப்படையில் உருவானதே மாமாங்கம் - ஒரு இரத்தச் சரித்திரம்.
அதென்ன இரத்தச் சரித்திரம்? எதற்கு இந்த பின்னொட்டு? இது தேவை தானா? என்ற கேள்வி இயல்பாக எழலாம். காரணம் உள்ளது நண்பர்களே..! உங்களின் மதிப்பில்லா நேரத்தில் சில நிமிடங்களை ஒதுக்கிக் கொடுங்கள். நான் விளக்குகிறேன்.
மாமாங்கம் என்பது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் விழா. கும்பகோணம் கும்பமேளா போல் இன்றைய கேரளத்தில் அன்றைய மலையாள நாட்டில் திருநாவாய் எனும் இடத்தில் பாரதப்புழா (நிலாநதி என்ற பெயரும் உண்டு) கரையிலுள்ள வெண்பரப்பில் தைபூசத்தில் தொடங்கி மாசி மகம் வரை முப்பது நாள் வரை நடந்த ஒரு பிரம்மாண்டமான விழா. இந்த விழா பரசுராமரால் துவங்கப்பட்டு விழா நிகழ்வு முறைகளை அவரின் வழிகாட்டுதலின் படி புராண காலத்திலிருந்து சங்ககாலம் தொட்டு பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நடந்த விழா தான் மாமாங்கம் எனும் மகாமகம்.
பிற்காலத்தில் குலசேகர பெருமாள் தன்னுடைய சேர தேசத்தின் மீது வேறொருவர் படையெடுத்து வந்து பரிபாலனஞ் செய்ய நேர்ந்தால் நாட்டின் மக்களுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் இடையூறு நேர்ந்து விடும் என்பதால் சேர தேசத்தை பல நாடுகளாக பிரித்து சிற்றசர்களுக்கு ஸ்வரூபங்களாக கொடுத்தார். தனித்தனி இராஜ்ஜியமாக இருந்தாலும் அனைவரும் சேரமான் பெருமானின் கட்டுப்பட்டுக்கு உட்பட்டே ஆட்சி செய்தார்கள்.
கி.பி 12 ம் நூற்றாண்டில் சேர தேசத்தை ஆண்ட ராம குலசேகர பெருமாள் தன்னுடைய இராஜ்ஜியத்திற்கு உட்பட்ட நாடுகளுக்கு சுயராஜ்ஜியம் எனும் அந்தஸ்த்தை கொடுத்தார். அப்படி சுயராஜ்ஜியம் பெற்ற வள்ளுவ தேசத்தின் அரசருக்கு திருநாவாய் வெண்பரப்பில் மாமாங்கம் நிகழ்வு நடத்தும் அதிகாரத்தோடு இரக்ஷாபுருஷன் என்ற பதவியையும், தனது கேடயத்தையும் பரிசாக கொடுத்தார்.
பெரும்படப்பு ஸ்வரூப அரசருக்கு நிலங்களை கொடுத்தார். இதேபோல் பல இராஜ்ஜியங்களுக்கு பொருப்புகளையும், பரிசுகளையும் கொடுத்தவர் தன்னுடன் தோளுக்கு தோளாய் துணை நின்று பல போர்களில் தனக்காக போரிட்ட தனது படையின் தளபதியாகவும் இருந்த ஏரநாட்டு சாமோரியர்களுக்கு எந்த பரிசையும் நிலங்களையும் கொடுக்கத் தவறிவிட்டார். அதற்காக வருந்தி தன்னுடைய வாளையும், தான் பிரார்த்தனை செய்து வழிபட்ட சங்கையும் பரிசாக கொடுத்ததோடு, கோழிக்கோடு என்ற தேவையற்ற சதுப்பு நிலப்பகுதியை அவருக்கு தானமாய் கொடுத்து, உன் வலு கொண்டு இராஜ்ஜியத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்ற வாக்கையும் கொடுத்தார்.
இந்த வாக்கை தனக்கு சாதகமாக்கி கோழிக்கோடுக்கு அண்டையில் உள்ள இராஜ்ஜியங்கள் மீது தொடர் யுத்தம் செய்து தன்னுடைய இராஜ்ஜியத்தை விரிவாக்கினார்கள் தொடர்ந்து வந்த ஏரநாட்டு சாமோரிய அரசர்கள்.
இந்த சூழலில் 15 ம் நூற்றாண்டின் மத்தியில் வள்ளுவ தேசத்தின் மீது திருநாவாய் வெண்பரப்பு இருக்கும் பகுதியில் போர்தொடுத்து வந்தார்கள். பெரும்படப்பு ஸ்வரூபம் என்றழைக்கப்படும் கொச்சி இராஜ்ஜியம் வள்ளுவ தேசத்தோடு இணைந்து சாமோரியருக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட தொடர்ச்சியாக மூன்று நாள் நடந்த யுத்தத்தில் வள்ளுவ தேசத்தின் இளவரசர்கள் இருவரை வீழ்த்தி திருநாவாய் வெண்பரப்பை வசப்படுத்தினார்கள் #சாமோரியர்கள்.
திருநாவாய் வெண்பரப்பில் வள்ளுவ தேசம் நடத்தி வந்த மாமாங்கம் விழாவின் உரிமையையும் பறித்து, இரக்ஷாபுருஷன் பட்டத்தையும் தன் வசமாக்கிக் கொண்டார் சாமோரிய அரசர் மனவிக்கிரம ராஜா.
வள்ளுவ தேசத்து அரசரின் மெய்க்காவல் வீரர்கள் அரசரை அரண்மனைக்கு பத்திரமாக அழைத்து வந்தார்கள்.
வள்ளுவ தேசத்து அரசரை அவ்விடத்திலிருந்து அழைத்துச் சென்ற நான்கு மெய்க்காவல் வீரர்களும் வள்ளுவ தேசத்து இளவரசரின் இறப்பிற்கும் பலி வாங்கி இழந்த வெண்பரப்பை மீட்டு, இரக்ஷா புருஷன் பட்டத்தை வள்ளுவ அரசர் வசம் கொண்டு வருவோம் என்று அரண்மனையில் அரசருக்கு அன்று சத்தியம் செய்து கொடுத்தார்கள்.
திருநாவாய் வெண்பரப்பை சாமோரியர்கள் கைப்பற்றி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மாமாங்கம் எனும் மகாமக நிகழ்வை தொடர்ந்து நடத்தி வந்தார்கள். திருநாவாய் சாமோரியர் வசம் சென்ற பிறகு, திருவிழா பெரும்பாலும் போர்க்களங்களாக மாறியது.
வள்ளுவநாட்டு இராச்சியத்திலிருந்து சாமோரியர்களைக் கொன்று திருநாவாய் வெண்பரப்பை பிடிப்பதற்காக அரசருக்கு சத்தியம் செய்து கொடுத்த மெய்க்காவல் வீரர்களின் குடும்பங்கள் பிற்காலத்தில் வள்ளுவநாட்டின் மிக முக்கியமான நான்கு பணிக்கர் குடும்பங்களாக கருதப்பட்டது.
அந்த வம்சம் தான் புதுமணப் பணிக்கர்கள், சந்திரத் பணிக்கர்கள், கோகட் பணிக்கர்கள் வெர்கோட் பணிக்கர்கள் இவர்களின் குடும்பத்திலிருந்து திருநாவாய்க்கு சென்று சாமோரியருடன் யுத்தம் செய்து வெண்பரப்பை மீட்க #சாவேர்களை (தற்கொலைப் படை வீரர்கள்) அனுப்பி வைத்தார்கள்.
மாமாங்கம் திருவிழாவில் நாற்பதாயிரம் வீரர்கள் காவல் காக்கும் அந்த வெண்பரப்பில் சாவேர்கள் சென்று சாமோரியர்களுக்கு எதிராக போராடி உயிர் நீத்தார்கள். திருநாவாயில் உயிர் நீத்த சாவேர்களின் உடலை வள்ளுவதேசத்திற்கு கொடுக்காமல் அங்குள்ள மணிக்கிணறில் எறிந்து நாய்களுக்கும், நரிகளுக்கும், கழுகுகளுக்கும் உணவாக்கினார்கள் சாமோரியர்கள்.
ஆரம்பத்தில் நிலப்பரப்பை மீட்க தொடர்ந்த சாவேர்களின் யுத்தம், குடும்பத்தாரின் இழப்பிற்கு பழிவாங்கும் குடிப்பகையாய் மாறியது. அதன் பிறகு தொடர்ச்சியாய் முன்னூறு ஆண்டுகளாக வள்ளுவ தேசத்து சாவேர்கள் தங்களின் முன்னோர்கள் கொடுத்த வாக்கிற்காகவும், தன் குடும்பத்தாரை கொன்றவனை பழிவாங்குவதற்காகவும் திருநாவாய் வெண்பரப்பை மீட்க மாமாங்கத்திற்கு சென்று கொண்டேயிருந்தார்கள்.
இதுபோன்ற சூழலில் கி.பி 1695 ல் நடந்த மாமாங்க திருவிழாவில் இராஜபீடத்தை கைபற்ற வள்ளுவ தேசத்திலிருந்து சாவேர்கள் செல்கிறார்கள். அதில் சந்திரத் வம்சத்தை சேர்ந்த பதினைந்து வயது சிறுவன் சாந்துண்ணியும் அவனுடன் மாமாவும் செல்கிறார்கள். அங்கு நடந்த கொடூர யுத்தத்தில் இராஜபீடத்தை நோக்கி சாந்துண்ணி சென்று சாமோரிய அரசரை நோக்கி வாள் வீசுகிறான். வீசிய வாள் வெண்கல விளக்கில் பட்டு விடுகிறது. அடுத்த முறை வாள் வீசுவதற்குள் அவ்வீரனை முதன்மை அமைச்சர் மாங்காத்தச்சனின் காவலர்கள் கொலை செய்து விடுகிறார்கள். இந்த குறிப்பிட்ட 1695 ஆம் ஆண்டு மாமாங்க நிகழ்வை கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் New Accounts of the East Indies' Chapter XV ல் கூறியுள்ளார்.
மாமாங்கத்தில் கொலை செய்யப்பட்ட சாவேர் வீரர்களின் உடல் வள்ளுவ தேசம் திரும்பாத நிலையில் இந்த பதினைந்து வயது சாந்துண்ணியின் உடல் மட்டும் வள்ளுவ தேசத்தை அடைந்திருக்கிறது. இன்றைய கேரள தேசத்தின் மலப்புரம் மாவட்டத்தில் அம்பலப்பரம்பு அருகில் மண்டகம் கிராமத்தில் இன்றும் சந்திரோத் வம்சத்தின் சாந்துண்ணிக்கு எடுக்கப்பட்ட ஆலயம் உள்ளது. இன்றும் அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
திருநாவாய் மாமாங்கத்தில் இறந்த சிறுவனின் உடலை வள்ளுவ தேசம் கொண்டு வந்தவர் யார்? என்ற தகவல் எங்கும் குறிப்பிடவில்லை என்றாலும் சிறுவனுக்காக உடல் வந்ததை பற்றியும், ஆலயம் எடுத்ததை பற்றியும் நாட்டார் வகை இலக்கியத்தில் உள்ளது. இந்த சாவேர் சாந்துண்ணியின் வாழ்க்கையும், தொடர்ந்து தேசத்தின் மண்ணை மீட்க சென்ற சாவேர்களின் வாழ்க்கையையும் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலே #மாமாங்கம்- #ஒரு_இரத்தச்_சரித்திரம் எனும் இப்புதினம்.
பெரு வலியையும், கொடுமையையும் தாங்கி வாழ்ந்த வள்ளுவ தேசத்தின் குடிகளின் வாழ்க்கையையும், மண்ணை காக்க செல்லும் சாவேர்களின் மனநிலையும், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தாரின் வேதனையையும் நீண்ட விவாதத்திற்கு உள்ளாக்கி உங்களையும் அக்காலத்தில் பயணிக்க வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு மிக அதிகமாக உள்ளது.
சாந்துண்ணி வாழ்ந்து வீர மரணம் அடைந்தவன் மாமாங்கம் நாவலில் முகுந்தனாய் உங்களின் வருகையை பார்த்து வானதி பதிப்பகத்தின் அரங்கினுள் காத்திருப்பான். கொஞ்சம் அவன் பேசும் மொழியை கேட்டுச் செல்ல வாருங்கள்.
சாந்துண்ணி எனும் முகுந்தன் வாழ்வில் மண்ணிற்காகவும், மக்களுக்காகவும், தன்னுடைய தனிப்பகைக்காகவும் சாவேராய் நின்ற தருணத்தை அனுபவிக்க நினைத்தால் அவனை பற்றுங்கள் அவன் உங்கள் கரம் பற்றுவான். மண்ணை இழந்து மீட்க துடித்த ஒரு குடியின் குரலை நீங்கள் உணர்வீர்கள் என்பது எந்தன் அசைக்க முடியாத நம்பிக்கை.
நன்றி -எழுத்தாளர் - சதிஷ் விவேகா.
இந்த புத்தகம்
கிடைக்கும் இடம்
Easwari Lending Library Velachery 044 42038296
EASWARI LENDING LIBRARY - CHENNAI
நன்றி
No comments:
Post a Comment